மும்பை,
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. அத்துடன் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தனி ஆளாக போராடினார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர், கடைசி போட்டியின் 2-வது இன்னிங்சில் முதுகு வலி காரணமாக பந்து வீச முடியவில்லை. மேலும் காயம் எந்த அளவில் உள்ளது என்றும் தெரியவில்லை.
இந்நிலையில் பும்ராவின் இந்த நிலைக்கு கடைசி போட்டியில் இந்திய அணி நிர்வாகம் தவறான பிளேயின் லெவனை தேர்ந்தெடுத்ததே காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த தொடரில் கரும்பில் இருந்து சாற்றை பிழிவது போல் பும்ராவை பிழிந்து விட்டார்கள். டிராவிஸ் ஹெட் வந்தால் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. லபுஸ்சேன், சுமித் என யார் களத்திற்கு வந்தாலும் விக்கெட்டை எடுக்க பந்து அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் மட்டும் எவ்வளவு ஓவர்கள் வீசுவார். அதனால் அவர் கடைசியில் பவுலிங் செய்வதற்கு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஒருவேளை பும்ரா விளையாடி இருந்தாலும் ஆஸ்திரேலியா வென்றிருக்கும். கொஞ்சம் கடினமாக வெற்றி பெற்று இருப்பார்கள். ஆனால் நீங்கள் பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்கள். அணி நிர்வாகமான நீங்கள் அவர் எவ்வளவு ஓவர் வீச வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். அதே போல அணி தேர்வும் சரியாக இல்லை.
வேகத்துக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் நீங்கள் 2 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்தீர்கள். எனக்கு அது புரியவில்லை. பிட்சை பார்த்ததும் எந்த மாதிரியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிறிய விஷயம் கூட உங்களுக்கு தெரியவில்லை" என கூறினார்.