
சென்னை,
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் கதை. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை வேலூர் சிறைக்கு அழைத்து வந்து காவல் துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள்.
சசிகுமார் உள்ளிட்ட 43 பேரும் சிறையில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள். மனைவி, குழந்தைகளை பிரிந்து சிறையில் துயரங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் சிறையில் இருந்து தப்பிக்கவும் ஒரு பிரிவினர் முடிவு செய்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி தப்பித்தார்களா? துயரில் வாழும் அவர்களுக்கு நீதி கிடைத்ததா? என்பதே படத்தின் கதை.
மாறன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார், சசிகுமார். போலீசிடம் அவர் அடிவாங்கும் காட்சிகளில், கண்களில் ஈரத்தை எட்டிபார்க்க செய்துவிடுகிறார். ஈழத்தமிழ் பேச்சு அவருக்கு நன்றாக பொருந்துகிறது. சிறையில் இருந்து அவர் தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் திக்... திக்... ரகம்.
சசிகுமார் மனைவியாக, எதார்த்த நடிப்பால் கட்டிப்போடுகிறார் லிஜோமோல் ஜோஸ். உருக்கமான வசனங்கள் பேசி சிலிர்க்கவும் வைக்கிறார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். போலீஸ் அதிகாரியாக சுதேவ்நாயர் வெறுப்பேற்றும் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். போஸ் வெங்கட், சத்யா, மாளவிகா அவிநாஷ், ரமேஷ் கண்ணா, மு.ராமசாமி உள்ளிட்டோரின் நடிப்பிலும் நேர்த்தி. வாய் பேசாமல் வரும் பாய்ஸ் மணிகண்டன் பேசாமலேயே அசத்திவிட்டார்.
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. பின்னணி இசை அசத்தல். உணர்வுப்பூர்வமான காட்சிகள் பலம். போலீசார் மேற்கொள்ளும் விசாரணை காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை லேசாக சலிப்பை எட்டிப்பார்க்க செய்கிறது.
உணர்வு ரீதியான கதைக்களத்தில் எதார்த்த காட்சிகளை நிறைத்து படத்தை இயக்கி கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் சத்யசிவா.
பிரீடம் - இன்னும் போராட்டம் தேவை.