
துபாய்,
இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே கடைசி டெஸ்ட் போட்டி சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 'நம்பர் 1' இடத்தை பறிகொடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 22 மற்றும் 6 ரன் வீதமே எடுத்து சொதப்பிய ரூட் 21 புள்ளிகளை இழந்து 868 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே டெஸ்டில் சதம் அடித்த மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மீண்டும் 'நம்பர் 1' இடத்தை பிடித்துள்ளார்.
அதே டெஸ்டில் 269 மற்றும் 161 ரன்கள் குவித்து வரலாறு படைத்த இந்திய கேப்டன் சுப்மன் கில் இதன் மூலம் 147 புள்ளிகளை சேகரித்ததுடன் தரவரிசையில் கிடுகிடுவென முன்னேறி (15 இடங்கள்) எகிறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் டாப்-10 இடத்திற்குள் நுழைந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வரிசையில் இந்திய வீரர்களான ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு) இருக்கிறார்கள்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடருகிறார்.