அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

9 hours ago 2

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அறிவித்து உள்ளது. இந்த வரி விதிப்புகள் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக அந்தந்த நாடுகளுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசும்போது, நாடுகளுக்கு வரி விதிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, இங்கிலாந்துடனும், சீனாவுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இந்தியாவுடன் ஒப்பந்தம் முடிய கூடிய நிலையில் உள்ளது என கூறியுள்ளார். இதனால், புதிய வரி விதிப்புகளுக்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் இந்தியா உள்ளது. இதனை வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் இன்று உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவராகவும் அகர்வால் உள்ளார்.

இந்தியா தரப்பில், இதுவரை 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் ஒன்று முன்னேற்ற நிலையில் உள்ளது. அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கான முயற்சி நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. நியூசிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

Read Entire Article