புனே,
மராட்டிய மாநிலம் புனே நகரில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் தொற்று பரவி வருகிறது. அசுத்தமான தண்ணீர் காரணமாக ஜி.பி.எஸ். புனேயில் பரவி வருவதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 130 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடலில் உணர்ச்சியற்ற தன்மை ஏற்படும், தசைகள் பலவீனமடையும், உடல் பாகங்கள் செயலிழக்கவும் செய்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. புனேக்கு வந்தபோது ஜி.பி.எஸ். நோய் பாதிப்புக்குள்ளான 40 வயது பட்டய கணக்காளர் கடந்த 26-ந் தேதி சோலாப்பூரில் உயிரிழந்தார்.
இதேபோல கடந்த புதன்கிழமை புனேயில் 56 வயது பெண் ஜி.பி.எஸ். பாதிப்பால் உயிரிழந்தார்.இந்தநிலையில் 36 வயது டாக்சி டிரைவர் ஒருவரும் நோய் பாதிப்புக்கு உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. டாக்சி டிரைவர் கடந்த 21-ந் தேதி நோய் பாதிப்பு காரணமாக புனேயில் உள்ள யஷ்வந்த் ராவ் சவான் நினைவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். டாக்சி டிரைவர் மரணம் குறித்து பிம்பிரி சிஞ்வாட் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜி.எஸ்.பி. தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்சி டிரைவர் உயிரிழப்பு குறித்து ஆஸ்பத்திரியில் நிபுணர் குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு நிமோனியா இருந்ததும், தீவிர சுவாசப்பிரச்சினைக்கு ஆளாகியதும் தெரியவந்தது என கூறப்பட்டுள்ளது.