சென்னை: புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகளை வரையறுக்கும் போது பிராந்திய சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரங்களைத் தேர்ந்தெடுக்க மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் நேற்று ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.
அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.இந்த மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு மானியமாக சுமார் ரூ. 53,000 கோடியும், இழப்பீட்டு நிதியாக ரூ. 52,000 கோடியும் ஒதுக்கி ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பைக் குறைப்பதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 2017-18ம் ஆண்டில் 19.47 சதவீதமாகயிருந்த இந்த இழப்பு, 2023-24ம் ஆண்டில் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மாநில அரசு, சுமார் 20,000 மெகாவாட் அளவிலான நீரேற்று நீர்மின் திட்டங்களையும், மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளையும் நிறுவுவதன் மூலம் எரிசக்தி சேமிப்புத் திறனைப் பெருமளவில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.அதிவேகமான மின் தேவை வளர்ச்சி, கரியமில வாயு உமிழ்வுகள் குறித்த அதிகரித்து வரும் சிக்கல்கள் மற்றும் புதிய எரிசக்தி மூலங்களில் நிகழும் தொடர்ச்சியான தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியன, நமது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பின் எதிர்காலத்திற்குப் பெரும் சவால்களை முன்வைக்கின்றன.
புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகள், ஒவ்வொரு குறிப்பிட்ட எரிசக்தி ஆதாரங்களின் அடிப்படையிலும் வரையறுக்கப்படாமல், மாநிலங்கள், தங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதும், தங்களின் பிராந்திய சூழலுக்கு மிகவும் உகந்ததுமான எரிசக்தி ஆதாரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகளில் பிராந்திய சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரங்களை தேர்ந்தெடுக்க அனுமதி: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.