சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில், 52 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்ய விஜிலென்ஸ் போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.35 கோடி மதிப்பில் சொத்து
கள் வாங்கியிருந்தது தெரியவந்தது. இதனால், முன்னாள் அமைச்சர் அவரது மனைவி, மகன்கள் உட்பட 4 பேர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த 17ம் தேதி முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அவரது மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தோஷ்குமார் வீட்டில் ரூ.1.75 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், லாக்கரில் வைத்திருந்த வெள்ளி, தங்க நகை ஆவணங்கள் மற்றும் எம்எல்ஏ ராமச்சந்திரன், மனைவி மணிமேகலை, மகன் விஜயகுமாரின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் என ரூ.6.28 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தாக தெரிவித்தனர். இந்த ஆணவங்களின் அடிப்படையில், நேற்று முன்தினம் சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன் சந்தோஷ்குமார், மருமகள் சுவர்ணாம்பிகா ஆகிய 3 பேரின் வங்கி கணக்கு விவரங்கள், லாக்கரில் வைத்திருந்த நகைகளின் ஆவணங்கள் குறித்து நேற்று ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள வங்கியில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர்.
சுமார் 6 மணிநேரம் நடந்த விசாரணையில் 90 சவரன் நகை, கிலோ கணக்கில் வெள்ளி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் எப்போது, எவ்வாறு வாங்கப்பட்டது, அதற்குண்டான ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்ததில், கணக்கில் வராத நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கூறுகையில், ‘முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த 17ம் தேதி அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அதில் அவரது 2 மகன்கள், ராமச்சந்திரனின் மனைவி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதா என கண்டறிய திருவண்ணாமலை, சேலம், ஊட்டி, ெசன்னை, காஞ்சிபுரம் உள்பட 52 இடங்களில் இடங்களில் பத்திரப்பதிவு அலுவலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்டமாக சந்தோஷ்குமார், அவரது மனைவி சொர்ணாம்பிகாவின் வங்கி கணக்கு மற்றும் லாக்கரில் ஆய்வு செய்ததில் கணக்கில் வராத நகை, வெள்ளி பொருட்கள் வாங்கப்பட்டதும், பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அடுத்த கட்டமாக சேவூர் ராமச்சந்திரன், அவரது மற்றொரு மகன் விஜயகுமார், அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துகளின் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். இந்த ஆய்வுக்கு பின்னரே எவ்வளவு சொத்துகள் வருமானத்திற்கு அதிகமாக வாங்கி குவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வரும்’ என்றனர்.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் சொத்துகுவிப்பு வழக்கு 52 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்ய விஜிலென்ஸ் முடிவு: வங்கி லாக்கர்களில் கணக்கில் வராத தங்கம், வெள்ளி குவியல்; பினாமி பெயரில் சொத்துகள்? appeared first on Dinakaran.