தமிழகத்தில் மெரினா உட்பட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ரூ.18 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி : உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறுகிறது

3 hours ago 2

சென்னை: சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழகத்தின் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான உட்டகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மெரினா கடற்கரையில் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் அமைக்கப்படுகிறது. சென்னையின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை விளங்குவதால், திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டை குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5.62 கோடி செலவில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த பகுதியில் கட்டுமானங்கள் தொடர்பாக பரிசோதனைகளை சென்னை மாநகராட்சி முடித்துள்ளது. அடுத்தகட்டமாக, தண்ணீர் பரிசோதனையை முடித்து, வரைபடங்களுடன் தகவல் பலகைகளை அமைத்து வருகிறது. 250 ஏக்கரில் மெரினாவில் மற்றொரு நீலக் கொடி நீட்டிப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பகுதி விரைவில் நீலக் கொடி மண்டலமாக மாற்றுவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக செய்து வருகிறது.

மேலும், சாய்ந்த இருக்கைகள், சிற்றுண்டிச் சாலை, வெளிப்புற ஜிம்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நவீன நடக்கும் பாதைகள் ஆகியவை இடம்பெற உள்ளது. இங்கு வணிகர்கள் கடைபோடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரை முழுவதும் படிப்படியாக இதேபோல் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் லேபிளான நீலக்கொடி சான்றிதழ் மெரினா கடற்கரைக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவ்வாறு நீலக்கொடி சான்றிதழ் பெற வேண்டுமானால், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், குளிக்க தகுந்த சுகாதாரமான நீர், பாதுகாப்பு உள்ளிட்ட 33 அம்சங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்கும் கடற்கரை பாதுகாப்பான சுகாதாரமான கடற்கரை என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தால், சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் அழகிய கடற்கரையாக இருக்கும் கடற்கரையை ஆய்வு செய்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நீலக்கொடி அங்கீகாரம் பெறும் கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பெரும்பான்மையான நாடுகள் நீலக்கொடி சான்றிதழை பெற முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நீலக்கொடி சான்றிதழ் பெற மெரினா கடற்கரை உட்பட 6 கடற்கரைகளை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. இந்நிலையில், சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் 4 கடற்கரைகளில் ரூ.18 கோடி செலவில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான உட்டகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ரூ.6 கோடியில் மெரினா கடற்கரை, ரூ.4 கோடியில் கடலூர் சில்வர் கடற்கரை, ரூ.4 கோடியில் நாகை காமேஸ்வரம் கடற்கரை, ரூ.4 கோடியில் ராமநாதபுரம் அரியமான் கடற்கரை ஆகிய 4 கடற்கரையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடற்கரையில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரியத் தாவரங்கள் குறித்த ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் கடற்கரை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும். இந்த பணிகள் முடிந்த பின்னர், கடற்கரையை ஆய்வு செய்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் இந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* விரைவில் ரோப் கார் திட்டம்
மெரினா கடற்கரையை மேம்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சுமார் 25 தொழிலாளர்களை கடற்கரையை கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்த உள்ளது. கடற்கரையை கண்காணிக்க ஆகும் மாத செலவு, சம்பளம் மற்றும் இயந்திரங்கள் உட்பட ரூ.6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரை ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக புதுப்பிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததும், கலங்கரை பகுதி மேம்பாட்டு பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சர்வீஸ் லேனில் ரோப் கார் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

* 4154 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்
உலகளவில் இதுவரை 4,154 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளன. இந்தியாவில் இது முதன்முறை அல்ல. இதற்கு முன் ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை, குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர் கடற்கரை, கேரளாவில் உள்ள காப்பாடு கடற்கரை, டையுவில் உள்ள கோக்லா கடற்கரை ஆகியவை இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும், அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரை, கர்நாடகாவில் உள்ள காசர் கோடு, படுபித்ரி கடற்கரை, ஆந்திராவில் உள்ள ருசி கொண்டா கடற்கரை, புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரை மற்றும் கோவளம் உட்பட 10 கடற்கரைகள் நீலக்கொடிச் சான்றிதழை பெற்றுள்ளன.

The post தமிழகத்தில் மெரினா உட்பட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ரூ.18 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி : உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article