அம்பேத்கரின் கனவை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: லண்டன் நினைவு இல்லத்தில் அமைச்சர் நாசர் பெருமிதம்

3 hours ago 2

சென்னை: இங்கிலாந்து நாட்டின், கேம்டன் நகரில், அம்பேத்கர் 1921-22ல் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படிக்கும்போது வாழ்ந்த இல்லத்தை நேரில் சென்று அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. சென்னை சட்ட பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் அப்போதைய முதல்வர் கலைஞர். சென்னை பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர். அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட உத்தரவிட்டது திமுக அரசு.

அம்பேத்கரின் பெயரை மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டபோது மகாராஷ்டிர மாநில அரசு அதனைக் கிடப்பில் போட்டது. சிலர் எதிர்த்தார்கள், வன்முறைகளில் ஈடுபட்டார்கள். அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்திலேயே இந்த நிலைமை இருந்தது. மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட தமிழ்நாட்டில் இருந்து தந்தி அனுப்ப வேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டார். உடனடியாகப் பல்லாயிரக்கணக்கான தந்திகள் போனது. அப்போது அந்த மாநிலத்தினுடைய ஆளுநர் அலெக்சாண்டர் மற்றும் முதலமைச்சர் சரத்பவார் ஆகியோர் கலைஞருக்குப் பதில் அனுப்பி ‘பெயரைச் சூட்டுவோம்’ என்று அறிவித்தனர்.

1989ம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக் கல்லூரிக்கு ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’ என்று பெயர் சூட்டியவர் கலைஞர். 1997ம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர் தான். மராட்டியத்தை விட தமிழ்நாட்டில் அம்பேத்கர் புகழ் பரவக் காரணமே திராவிட இயக்கம்தான். பட்டியலின மக்களுக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடும் வழங்கியர் கலைஞர். அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இறையாண்மை, சமதர்மம், மத சார்பின்மை, மக்களாட்சி நான்கும் இணைந்து பயணிக்கும் குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் கனவு. அத்தகைய அம்பேத்கரின் எண்ணங்களை பிசகாமல் தமிழக முதல்வர் அரசு நிறைவேற்றுகிறது. இவ்வாறு கூறினார்.

The post அம்பேத்கரின் கனவை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: லண்டன் நினைவு இல்லத்தில் அமைச்சர் நாசர் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article