புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் வடநாட்டு மாணவிக்கு நீதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது.
புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார் பெறவில்லை என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கேட்டு, சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்த மகிளா காங்கிரஸார் முடிவு எடுத்தனர்.