புதுச்சேரி கவர்னர் மாளிகையில் மீண்டும் வெடிகுண்டு சோதனை

5 days ago 2

புதுச்சேரி, மே 16: புதுச்சேரி கவர்னர் மாளிகையில் மீண்டும் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, முதல்வரின் இல்லம், வணிக வளாகம், பிரபல ஓட்டல்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கடந்த சில நாட்களாக மர்ம நபர் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், கவர்னர் மாளிகைக்கு கடந்த 13ம் தேதி 4வது முறையாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். ஒவ்வொரு முறை மர்ம நபர் மிரட்டல் விடுக்கும் நேரங்களில் அந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்துவதும், சோதனை முடிவில் அது வெறும் புரளி என தெரியவருவதும் வாடிக்கையாக உள்ளது. வெவ்வேறு பெயர்களில் மிரட்டல் விடுக்கும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் புதுச்சேரி போலீசார் திணறி வருகின்றனர். மேலும், அந்த நபரால் போலீசாருக்கு மிகவும் தொல்லையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கவர்னர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாரத்தில் 2 முறை அல்லது அவ்வப்போது சோதனை நடத்த காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று காலை எஸ்பி ரகுநாயகம் தலைமையில் பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சிக்மா செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு பிரிவு எஸ்ஐ பிரகாஷ் ஆகியோர் மோப்பநாய் டோனி உதவியுடன் கவர்னர் மாளிகை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சோதனை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, புதுச்சேரி விமான நிலையத்தில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களால் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல், கவர்னர் மாளிகையிலும் வாரத்தில் 2 முறை அல்லது அவ்வப்போது சோதனை நடத்த உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, தற்போது சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.

The post புதுச்சேரி கவர்னர் மாளிகையில் மீண்டும் வெடிகுண்டு சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article