புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்பு முனைக் கருவி கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

3 hours ago 1

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்பு முனைக் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எலும்பு முனைக் கருவி ஆடை நெய்யும் தொழிலான நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டுநுண் வினைஞர் காருகர் இருக்கையும்” என்றுரைக்கிறது சிலப்பதிகாரம்.

பழந்தமிழர்கள் ஆடையானது பட்டு, மயிர், பருத்தி ஆகிய இம்மூன்றினாலும் நெய்யப்பட்டதாக உணர்த்துகிறது இந்தப்பாடல்.

ஆடை நெய்யும் தொழிலான நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய ‘எலும்பு முனைக் கருவி’, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் இன்று 192-196 செ.மீ ஆழத்தில், 7.8 கிராம் எடையுடன், 7.4 செ.மீ நீளம் மற்றும் 1 செ.மீ விட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடைந்த தங்கத்தின் சிறு பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே இடத்தில் தங்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் இங்கு வாழ்ந்த மக்கள் செழிப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததை உணர்த்துகிறது. பழந்தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் இந்த புதிய கண்டுபிடிப்புகள் பெருமகிழ்வைத் தந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்பு முனைக் கருவி கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Read Entire Article