புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 31 பேர் காயம்

1 week ago 4

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே மாங்கனாம்பட்டியில் வீரமகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக டோக்கன் வரிசைப்படி அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பாய்ந்தோடின. மேலும் களத்தில் நின்று வீரர்களை தெறிக்கவிட்டன. வீரர்களும் சளைக்காமல் காளையின் தமிலை பிடித்து அடக்க முயன்றனர்.

ஜல்லிக்கட்டு நடைபெற்றதை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். அவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சரக்கு வாகனங்களின் மேல் ஏறி நின்றும் வேடிக்கை பார்த்தனர்.

ஜல்லிக்கட்டில் 572 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் முட்டியதில் 31 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 8.40 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 3.35 மணிக்கு முடிவடைந்தது. ஜல்லிக்கட்டையொட்டி பாதுகாப்பு பணியில் ஏாளமான போலீசார் ஈடுபட்டனர். 

Read Entire Article