நன்றி குங்குமம் தோழி
பாலின பேதங்கள் ஒரு பார்வை
பாலின பேதங்கள் நம் வாழ்வில் ஆண்டாண்டு காலமாக, வழிவழியாக நம்மிடம் கடத்தப்பட்டு இன்றுவரை பலவிதங்களில் நம் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் எந்த மனிதராக இருந்தாலும் அவர் எந்தப் பாலினத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் எல்லா மனிதர்களும் ஒன்று போல் மதிக்கப்பட வேண்டும். ஒரே மாதிரியான உரிமைகள் கிடைக்கப் பெற்றவர்களாகவும், அத்தனை கடமைகளுக்கும் உட்பட்டவர்களாகவும் இருத்தல்தான் இயற்கையாகவும் நியாயமாகவும் நாம் இருப்பதற்கான சான்றாக இருக்க முடியும்.
முன்பே ஓர் அத்தியாயத்தில் சொன்னது போல் இயற்கையானது, இன விருத்திக்காக நம் உடற்கூறுகளை பெண்ணுக்கும் ஆணுக்கும் சிறிது வித்தியாசமாக படைத்திருக்கிறது. இது இணைந்து வாழ ஒரு வழியாக பார்க்காமல், பிளவுபடுத்தி பார்த்ததும் இன்றும் பார்த்துக்கொண்டிருப்பதும்தான் நம் அழிவுக்கு காரணமாக இருக்கிறது.
பிள்ளை பெறுவதும், பிறந்த சிறிது காலம் வரை பால் கொடுப்பதும் தவிர, இங்கு வேறு எந்தப் பிரிவினையும் பாலினத்தை வைத்து செயல்படுத்தாமல் வாழ்ந்தால் இங்கு வாழ்வே அத்தனை அழகாகிவிடும். ஆணையும் பெண்ணையும் பிரிக்காமல், ஒன்றாக வளரவிட்டு, ஒரே போல் நல்ல எண்ணங்களையும், நல்ல கல்வியையும், மற்றவர் மீதான மரியாதையையும் ஊட்டி வளர்த்தால், இந்த பேதங்களினால் ஏற்படும் அடிமைத் தனங்களையும், அடிமைகளாக இருப்பதினால் ஏற்படும் வன்மங்களையும் காழ்ப்புணர்வுகளையும் தடுக்கலாம்.
ஆணாக தான் பிறந்ததே தன் சாதனையாக நினைத்து இறுமாப்புடன் வாழும் ஆண்களும், பெண்ணாக பிறந்ததே தான் வாங்கி வந்த சாபமாக நினைத்து சுயபச்சாதாபம் கொண்டு வாழும் பெண்களும், நான் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, உங்கள் இலக்கணங்களில் என் உடலோ, உள்ளமோ விழவில்லை, எப்படி இருந்தாலும் நானும் மனிதப்பிறவிதான், என்னை நானாக அப்படியே ஏற்றுக் கொள்ளுங்களேன் என்று மன்றாடிக்கொண்டும் சிலர் இருக்க, இந்த உலகில் அமைதி எங்கிருந்து உலா வரும்? அமைதியற்ற இவ்வுலகில், தனிமனிதர்கள் மகிழ்வாக இணைந்து வாழ்வது எப்படி சாத்தியமாகும்?
இந்த மண்ணில் வந்து பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிருக்கும் தனக்கான வாழ்வை வாழ உரிமை உண்டு. இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் இலக்கணங்களுக்குள் வாழாமல் போவது குற்றம் எப்படி ஆகும்? இன்னொரு உயிரை அதன் போக்கில் வாழவிடாமல் இருப்பதுதானே குற்றமாக இருக்க முடியும் உண்மையில்? மற்றவருக்கு தீங்கு நினைப்பதோ, தீங்கிழைப்பதோ தவறு என்று சொல்லிக் கொடுக்கப்பட்டுதானே நாம் வளர்கிறோம்? ஆனால் ஒட்டுமொத்த சமுதாயமாக ஒன்று சேர்ந்து இத்தனை உயிர்களை பாலினம் என்ற ஒற்றை புள்ளியில் வைத்து தீங்கிழைக்கிறோமே நாமெல்லாம், அது எப்படி முறையாகும்?
சிறிதே சிறிது, நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட இலக்கணங்களை இறக்கி வைத்துவிட்டு, புதியதான கண்கள் கொண்டு இவ்வுலகை பார்க்கத் தொடங்கினால் போதும். தனி மனிதர்
களின் தேர்வுகளில், அது கல்வியாக இருக்கலாம், தொழிலாக இருக்கலாம், உடையாக இருக்கலாம், உணவாக இருக்கலாம், பாலினமாக இருக்கலாம், இங்கு யாரும் தலையிடாமல், இயன்றவரை உதவியாக மட்டுமே இருந்தால் இங்கு இன்றிருக்கும் தனி மனிதர்களின் நிறைய பிரச்னைகள் உருவாகாமலே இருக்கும். அப்படி பிரச்னையின்றி தன் வாழ்வை வாழ வழிவகுக்கும், சுற்றியுள்ள மனிதர்கள் மேலோ இல்லை சமூகத்தின் மீதோ எந்த தனிமனிதருக்கும் கோபமோ, காழ்ப்புணர்வோ, வன்மமோ, எந்தவிதமான எதிர்மறை உணர்வுகளும் பிறக்காமல் போகும்.
நாம் இதை பொதுநலமாகக்கூடப் பார்க்க வேண்டாம். சிறிது சுயநலத்தினோடே பார்க்கலாம். அனைவரையும் சமமாக பார்ப்பதில் எத்தனை அனுகூலங்கள் உண்டு என்று பார்ப்போம். இணையர் இருவரும் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவராக இருந்தால், பணம் ஈட்டுவதில் இருவரின் பங்கும் இருந்தால், சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் இருவரும் தேர்ச்சிப் பெற்றவராக இருந்தால், இருவரும் பிள்ளை வளர்ப்பில் பங்கு பெறுபவர்களாக இருந்தால், குடும்பத்திற்கான முடிவுகளில் இருவருக்கும் உரிமைகள் இருந்தால், உடல்நலக்குறைவாலோ, இல்லை வேறு எதுவும் காரணமாகவோ ஒருவர் சிறிது நாட்கள் உடன் இல்லாமல் போனாலும், குடும்பத்தில் ஒரு வேலையும் குறையாது.
எத்தனை உடல்நல பிரச்னைகள் இருந்தாலும், ஒரு பெண் எழுந்து வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேர் தேவைகளையும் கவனித்தே ஆக வேண்டும் என்றால், அவர் எப்படி குடும்பத்தில் இருப்பவர்களை மதிக்கவோ நேசிக்கவோ இயலும்? ஏதோ ஒரு காரணத்தினால், ஓரிரு மாதங்கள் பணம் ஈட்ட முடியாமல் போகும் ஆண் எத்தனை அவமானத்தில் கூனிக்குறுகிப் போவார்? அம்மாவோ அப்பாவோ இல்லாது போகும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு வேலை நின்றுதானே போகும்? உன் குறையை நான் நிரப்புவேன், என் குறையை நீ நிரப்புவாய் என்பதற்கு தானே இருவர் தேவைப்படுகிறோம்? ஆனால் இதைத் தவறாக புரிந்துகொண்டு சந்தர்ப்பவசமாக நான் இல்லையென்றால் அந்தக் குறை அப்படியேதான் இருக்கும் என்பதாகத்தான் நாம் வாழ்கிறோம்.
தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ இணையரில் ஒருவர் இல்லை என்றாகும் போது, இருவரும் எல்லாவற்றிலும் பங்கெடுத்து வாழ்ந்திருந்த வாழ்வில் மனதால் அவரில்லை என்ற குறை மட்டுமே இருக்கும். ஆனால் இந்திந்த வேலை பெண்ணின் கடமை என்றும் இந்திந்த வேலை ஆணின் கடமை என்றும் வகுத்து வைத்திருப்பது எத்தனை சுமையாகிப்
போகிறது ஒருவர் இல்லை என்னும் போது. இன்னும் மேலே சொல்லப்போனால், அங்கு அந்த ஒருவரின் இல்லாமை என்ற உணர்வு என்பது இயலாமையாகத்தான் போகிறதே தவிர அன்பின் நிமித்தமாக இருப்பதில்லை.
என் உறவினர் ஒருவர் குடும்பத்தில், அந்தப் பெண் படித்தும், அரசு வேலை கிடைத்தும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல், 30/40 வருடங்கள் கணவரையும் பிள்ளைகளையும் பார்த்து வளர்த்துக்கொண்டிருந்தார். பிள்ளைகள் சில வருடங்களில் படித்து திருமணம் புரிந்து வேறு ஊருக்கு சென்று விட்டார்கள். அந்தக் கணவரும் வேலையிலிருந்து ஓய்வடைந்துவிட்டார். பிள்ளைகள் அவர்களாக பார்த்து அனுப்பும் கொஞ்சம் பணத்தில்தான் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் ஒற்றுமையாக அழகாக வாழ்ந்திருந்த தம்பதிகள்தான். காலம் செல்லச் செல்ல அந்தப் பெண்மணி கணவரை வெறுக்கத் தொடங்குகிறார்.
காரணம், தான் விரும்பும் ஒரு சாதாரண புடவையோ, ஒரு முழம் பூவையோ வாங்கக் கூட கணவரிடம் கேட்க வேண்டியிருக்கிறது. அவரோ பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் அதற்கெல்லாம் செலவு செய்ய பணம் இல்லை என்கிறார். என்னை அன்றே வேலைக்குச் செல்ல அனுமதித்திருந்தால் இன்று நான் இப்படி சின்னச் சின்ன செலவுகளுக்கும் கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காதல்லவா? அத்தனைக்கும் இவர்தானே காரணம் என்கிறார். நியாயமான கோபம்தான் அல்லவா?
இன்னொரு வயதான தம்பதியரில் அந்த மனைவி திடீரென இறந்துவிட, என்னதான் அவர் இன்னும் ஆரோக்கியமாக இருந்தாலும், 40 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்திருந்தவர் மனைவியின் இழப்பில் தவிப்பாரே என நினைத்து பேசினால், அவரின் இழப்பெல்லாம் சமைத்துப்போட ஆளில்லை என்பதும், காபி போட்டுக்கொடுக்க ஆளில்லை என்பதுமாக இருக்கிறது.
இத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்ததில் அன்பும் மரியாதையும் பகிரப்பட்டு, அவரின் இழப்பு மனதால் உணரப்படுவதென்பது இல்லாமல், அவர் செய்து கொண்டிருந்த வேலைக்காகவும், அவரினால் கிடைத்துக்கொண்டிருந்த அனுகூலங்களுக்காகவும் மட்டுமே அவர் இழப்பை உணர்வது வாழ்வென்பதாகி, எம்மாதிரியான வாழ்வை நாமெல்லாம் வாழ்கிறோம்? கொடுக்கலும் வாங்கலும்தான் குடும்பம் என்றால், பகிர்வது நோக்கமில்லை என்றால், இந்தக் குடும்பம் என்பதில் என்ன பெரிய பெருமை வேண்டியிருக்கிறது?
பார்த்து சீராட்டி வளர்த்த தன் பிள்ளை இந்த சமூகம் ஒப்புக்கொள்ளும் இரண்டே பாலினத்திற்குள் அடங்காவிட்டால், அந்த இரண்டு பாலினங்களின் இலக்கணத்தை ஏற்காவிட்டால், அன்பு தொலைத்து, வெறுப்பு கொண்டு வீட்டை விட்டே துரத்திவிடும் பெற்றோர்களை கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது?
நம்மிடம் திணிக்கப்பட்டிருக்கும் இந்த நிம்மதி குலைக்கும், பாதுகாப்பு உணர்வை குலைக்கும், சுயமரியாதையை இழக்க வைக்கும், தன்னம்பிக்கையை தகர்க்கும், மனித நேயத்தை முறிக்கும், ஆதிக்க உணர்வையும், அடிமைத்தனத்தையும் வளர்க்கும்.. இன்னும் பலபல தீமைகளை உருவாக்கும் இந்த பேதங்கள் முற்றிலுமாக களையப்பட வேண்டும். அந்த நாளை நோக்கி நாம் ஒவ்வொருவரும் அடி எடுத்து வைக்கலாமா? புதியதோர் உலகம் செய்வோமா?
(பாலின பேதங்கள் நிறைவு!)
The post புதியதோர் உலகம் செய்வோம்! appeared first on Dinakaran.