செங்கல்பட்டு: புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு தலைமை குற்றவில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது புதிய கடைக்கு மின் இனணப்பு கோரி கடந்த 28.12.2011 அன்று உரிய ஆவணங்களுடன் துரைப்பாக்கம் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது உதவி பொறியாளராக பணியாற்றி வந்த பச்சையப்பனிடய் மனு கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட பச்சையப்பன் பணம் செலுத்தும் கவுண்டரில் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ரூ.50 கட்டிவிட்டு, தனக்கு தனியாக ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, 13.1.2012 அன்று ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ரூ.50 மற்றும் கட்டிவிட்டு அந்த ரசீதை உதவி பொறியாளர் பச்சையப்பனிடம் காண்பித்துள்ளார்.
அதனையடுத்து, பச்சையப்பன் சொன்னபடி எஸ்ட்டிமேட் கட்டணம் ரூ.1,950ஐ, 18.1.2012 அன்று கவுண்டரில் கட்டிவிட்டு மறுநாள் 19.1.2012 அன்று பச்சையப்பனை மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சந்தித்து மின் இனைப்பு பற்றி கேட்டுள்ளார். அதற்கு பச்சையப்பன் ரூ.5000 எங்கே என கேட்டதாகவும் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று மணிகண்டன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பச்சையப்பன் கேட்ட பணம் ரூ.5000திலிருந்து பாதியாக குறைத்து ரூ.2,500 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் பச்சையப்பன் மீது கடந்த 19.1.2012 அன்று சென்னை நகர பிரிவு-1, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், கடந்த 19.1.2012ம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து 20.1.2012 அன்று பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொண்டு மணிகண்டனிடம் ரூ.2,500 லஞ்சப் பணத்தை தமிழ்நாடு மின்சார வாரிய சென்னை துரைப்பாக்கம் உதவி பொறியாளர் பச்சையப்பன் பெறும்போது அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பச்சையப்பன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கினை செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தனர். இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை குற்றவில் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ குற்றம் சுமத்தப்பட்ட பச்சையப்பன் குற்றவாளி என தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டளையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.