புதிய மினி பேருந்து திட்டம்; ஜூன் 15ம் தேதி முதல் அமல்: முதற்கட்டமாக 1,842 பேருந்து சேவைக்கு அனுமதி

1 day ago 4

சென்னை: மினி பேருந்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 1,842 மினி பேருந்து சேவை தொடங்கப்படும் என பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, இத்திட்டத்திற்கான விரிவான வரைவறிக்கையை அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. அந்தவகையில், தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கிலோ மீட்டர் பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கிலோ மீட்டர் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிலோ மீட்டர் கூடுதலாக இயக்க மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இச்சேவையானது நூறு குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இடங்களுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் போக்குவரத்து கழகங்கள் இயக்கும் மினி பேருந்துகளுக்கு தடையாக இருக்காது. மேலும், அனுமதியில்லா வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காகவே பேருந்து சேவையில்லா இடத்தில் எங்கு வேண்டுமானாலும் மினி பேருந்தை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்து சேவையுள்ள இடங்களில் கூடுதலாக 750மீ இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், ஒரு கிமீ தொலைவில் அரசு மருத்துவமனை உள்ளிட்டவை இருந்தால் அந்த தொலைவுக்கும் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தினை வரும் ஜூன் 15ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் 2950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக இச்சேவையை மேம்படுத்துவதன் மூலமாக கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான பொதுமக்கள் பயனடைவர். மேலும், இதற்கான கட்டணம் என்பது குறைந்தபட்சமாக 2 கி.மீட்டருக்கு ரூ.4- ஆகவும், 26 கி.மீட்டருக்கு ரூ.16 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post புதிய மினி பேருந்து திட்டம்; ஜூன் 15ம் தேதி முதல் அமல்: முதற்கட்டமாக 1,842 பேருந்து சேவைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article