சென்னை: வன்னியர்களக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் `சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு' நேற்று மாலை நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி மாநாட்டு மலரை வெளியிட்டார். பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, செய்தி தொடர்பாளர் க.பாலு, செயற்குழு உறுப்பினர் ஈக்காட்டுத்தாங்கல் இரா.சிவகுமார், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உட்பட முக்கிய நிர்வாகிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.