சென்னை: நூற்றாண்டு நிலைத்து நிற்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றும், இந்த கட்டிட கலைக்கு ஸ்டாலின் கட்டிடக் கலை என்று பிற்காலத்தில் பதிவு செய்வார்கள் என்றும் அமைச்சர் எ.வ.வேலு பதிலுரையில் கூறினார். சட்டப் பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
பாரம்பரிய கட்டிடங்களை புதுப்பிக்கவும், மறுசீரமைக்கவும் சென்னையை தலைமையிடமாக கொண்டு, 2024 அக்டோபர் 4ம் தேதி புதிதாக மரபு கட்டிடங்கள் வட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராணி மங்கம்மாள் அரண்மனை ரூ.9 கோடி மதிப்பீட்டிலும், அங்கு, 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் எனும் சொக்கநாத நாயக்கர் அரண்மனை ரூ.29 கோடி மதிப்பீட்டிலும் புதுப்பிக்கப்படுகின்றன.
கலைஞர் நினைவிடத்தில் கலைஞர் உலகம் அருங்காட்சியகம் தரை மட்டத்தில் இருந்து 15 அடிக்குக் கீழ் அமைந்துள்ள நிலவறையாகும். இந்த அருங்காட்சியகத்தில் கலைஞர் உலகம் அருங்காட்சியகம் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கலைஞரின் வாழ்க்கை வரலாறு அனைவரையும் கவரும் வகையில் அழகுறச் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை 5.32 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கட்டப்பட்ட, கட்டிடங்கள் பல நூறாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இந்த கட்டிட கலையை ஸ்டாலின் கட்டிடக் கலை என்று பிற்காலத்தில் பதிவு செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
The post புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் ஸ்டாலின் கட்டிடக் கலை என்று பிற்காலத்தில் பதிவு செய்வார்கள்: அமைச்சர் எ.வ.வேலு பதிலுரையில் பெருமிதம் appeared first on Dinakaran.