வேலூர், மே 12: வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 130 சிறப்பு பஸ்களுடன், அலைஅலையாய் வரும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு கூடுதலாக 50 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியான நேற்று வழக்கமாக வரும் பக்தர்களை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரமாக நேற்று இரவு 8.53 மணி தொடங்கி 12ம் தேதி இன்று இரவு 10.48 மணி வரை குறிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்காக வழக்கத்தை விட, குறிப்பாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருவண்ணாமலைக்கு வரலாம் என்பதால் அதற்கான சிறப்பு தற்காலிக பஸ் நிலையங்கள், மாற்றுப்பாதைகள் என அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
எனவே, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து மண்டலங்களில் இருந்தும் இயக்கப்படுகிறது. வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 130 பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கம் சார்பில் நேற்று காலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் புதிய பஸ்நிலையத்தில் திருவண்ணாமலைக்கு செல்ல காலை முதலே பக்தர்கள் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். நாளை வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் முதல் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக மக்கள் அலை அலையாய் குவியத்தொடங்கினர். கட்டுக்கடங்கா கூட்டத்தால் வேலூர் புதிய பஸ் நிலையம் திணறியது.
இதனால் வேறு வழியின்றி வேறு மார்க்கங்களில் சென்ற பஸ்களை திருவண்ணாமலைக்கு திருப்பிவிட அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் முடிவு செய்தது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 130 சிறப்பு பஸ்களுடன் கூடுதலாக 50 பஸ்கள் என மொத்தம் 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 90 பஸ்களும் திருப்பத்தூரில் இருந்து 60 பஸ்களும் ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அதிகாரிகள் கூறுகையில், ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில், வேலூரில் இருந்து 90 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 60 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 30 சிறப்பு பஸ்கள் என 130 சிறப்பு பஸ்கள் இன்று(நேற்று) முதல் இயக்கப்படுகின்றன. எனவே பக்தர்கள் இந்த சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 183 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு appeared first on Dinakaran.