புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பதிவு: இந்தியாவில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு; ஒரே ஆண்டில் காப்புரிமை கிடைக்க துரித ஏற்பாடு

1 month ago 3

* 7500 காப்புரிமை பதிவுகள் செய்து சாதனை
* 40 அறிவுசார் சொத்துரிமை பிரிவுகள் அமைப்பு

* சிறப்பு செய்தி
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையை பெற்றுத் தருகிறது. இந்த காப்புரிமையை பெறுவதன் மூலம் கண்டுபிடிப்புக்கு சொந்தம் கொண்டாட முடியும். தொழில் முனைவோராக மாறுவதற்கான அடித்தளமும் அமைக்க முடியும். இதற்கான காப்புரிமையை ஒன்றிய அரசு வழங்குகிறது. அந்த வகையில் இந்த காப்புரிமையை பதிவு செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 7500 காப்புரிமை பதிவுகளுடன் முதல் இடம் வகிக்கிறது. அதற்கடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

இந்நிலையில் காப்புரிமையை பதிவு செய்வதில் ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களுக்கு எளிமையாக்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் 40 அறிவுசார் சொத்துரிமை பிரிவுகளை உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அமைத்துள்ளது. இதனுடன் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.), குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் (எம்.எஸ்.எம்.இ.) இணைத்து ஒருங்கிணைந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக காப்புரிமையை பதிவு செய்து விரைவாக காப்புரிமை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே காப்புரிமையை பெறுவதற்கு 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ஒரே ஆண்டில் கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காப்புரிமையை பெற்றுத்தருவதோடு நிறுத்திவிடாமல், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களை அல்லது கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற முதலீட்டாளர்களை கண்டறிந்து, அவர்களை ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் திட்டமாக, மாணவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்துக்கு விண்ணப்பித்து, அதில் தேர்வு செய்யப்படும் ஆயிரம் பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு அவர்களின் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையும் பெற்றுத்தரப்படுகிறது. நடப்பாண்டில் இதற்காக 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களில் 1000 பேரை தேர்வு செய்யும் நடைமுறை நடந்து வருகிறது. விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த திட்டம் செயல்பாட்டில் இருப்பதாகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமானது, காப்புரிமையை பெற்று தருவது, தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது தருவது ஆகிய 2 சிறப்பம்சங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கான ஆராய்ச்சி மனப்பான்மையை பள்ளிகளில் இருந்தே தொடங்குகிறோம். இதனால் அவர்கள் வருங்காலங்களில் தொழில் முனைவோர்களாக மட்டுமல்லாமல், பலருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன.

அவற்றில் பொறியியல் மாணவர்களின் விண்ணப்பங்கள்தான் அதிகம். முன்பெல்லாம் ஒருவரின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற சென்னைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை பிரிவுகள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே காப்புரிமை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வாய்ந்ததாக சில பொருட்கள் இருக்கும். அதனை வெளிக்கொண்டு வராததால் பல பொருட்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றினை கண்டுபிடித்து அதற்கு உயிர் கொடுக்கும்போது, பல ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரம் பெருகும். இதனால் மாவட்டத்தின் வருவாயும் பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.

பயனடைந்தவர்கள் எண்ணிக்கை (ஆண்டு வாரியாக)
ஆண்டு பெறப்பட்ட
விண்ணப்பம் தேர்வானவை பயனாளிகள்
2017-18 6827 500 1222
2018-19 9620 700 1772
2019-20 10,726 700 1827
2020-21 கொரோனா காரணமாக நிறுத்திவைப்பு
2021-22 11546 1071 2622
2022-23 11165 1018 2376
2023-24 12496 1010 2487
2024-25 15183 செயல்பாட்டில் உள்ளது
விண்ணப்ப பதிவு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டில் தொடங்குகிறது.

* 61 பொருட்களுக்கு இதுவரை காப்புரிமை
2008ம் ஆண்டு வெறும் 5 ஆக இருந்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் அறிவுசார் சொத்துரிமை பிரிவு தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. கல்வி நிலையங்களில் படிப்பவர்கள் மட்டுமல்லாமல், கல்வியறிவு இல்லாதவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வாங்கி கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 61 பொருட்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மூலம் புவிசார் குறியீடு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

* எந்தெந்த காரணங்களால் காப்புரிமை வழங்குவதில் பிரச்னைகள் ஏற்படும்?
காப்புரிமை கோரிய கண்டுபிடிப்பு அல்லது அதில் உள்ள பாகங்கள் தவறான முறையில் பெறப்பட்டிருக்கலாம். ஏற்கனவே வெளியான காப்புரிமையாகவோ அல்லது முந்தைய தேதியில், அவை வெளியான ஆவணமாகவோ இருக்கலாம். ஏற்கனவே நன்கு அறியப்பட்டதாக இருக்கலாம். அல்லது முன்னுரிமை நாளுக்கு முன், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். காப்புரிமை சட்டப்படி, கண்டுபிடிப்புக்கான பொருளைக் கொண்டிருக்காது அல்லது அதற்கு காப்புரிமை வழங்க முடியாததாக இருக்கும். அந்த கண்டுபிடிப்பை தெளிவாக விளக்காத வகையில் இருக்கலாம். அல்லது அது எந்த விதத்தில் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவானதாக இருக்காது.

காப்புரிமை கோரியவர், அந்த கண்டுபிடிப்பை வெளிநாட்டில் காப்புரிமை கோர விண்ணப்பித்துள்ளார் என்ற விவரத்தை, காப்புரிமை கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்க மறந்திருந்தால் அல்லது அவருக்குத் தெரிந்து, அது தவறானதாக இருக்குமானால், சம்பிரதாய விண்ணப்பமாக இருந்து, அது முதல் விண்ணப்ப நாளில் இருந்து 12 மாத காலத்துக்குள் விண்ணப்பிக்கவில்லை என்றாலும், கண்டுபிடிப்பில் பயன்படுத்தப்பட்ட உயிரி பொருளின் பூகோளமூலம் (உயிர்களின் உண்மையான இருப்பிடம் அல்லது தோற்றம்) தவறாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது குறிப்பிடப்படாமல் இருக்கலாம். காப்புரிமை கோரிய கண்டுபிடிப்பு ஏற்கனவே உள்நாட்டில் வாழும் அல்லது பிற பகுதிகளில் வாழும் பூர்விகக் குடியினரிடம் எதிர்பார்க்கத்தக்கதாகவோ அல்லது தெரிந்ததாகவோ இருக்கும் பட்சத்தில் ஆகிய காரணங்களால் பிரச்னைகள் ஏற்படும்.

The post புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பதிவு: இந்தியாவில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு; ஒரே ஆண்டில் காப்புரிமை கிடைக்க துரித ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article