பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை துவம்சம் செய்தது. இதில் பெங்களூரு நிர்ணயித்த 170 ரன் இலக்கை ஜோஸ் பட்லரின் (73 ரன்கள்) அரைசதத்தின் உதவியுடன் குஜராத் அணி 17.5 ஓவர்களில் விரட்டிப்பிடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது.
முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்த பெங்களூரு அணிக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பீல்டிங்கின்போது முன்னணி வீரரான விராட் கோலியின் கை விரலில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் களத்தில் இறங்கி பீல்டிங் செய்தார்.
இருப்பினும் காயம் காரணமாக விராட் கோலி எதிர் வரும் சில போட்டிகளை தவற விட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து பெங்களூரு அணியின் பயிற்சியாளரான ஆண்டி பிளவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "விராட் கோலி நலமாக இருக்கிறார். முழு உடற்தகுதியுடன்" என்று பதிலளித்தார்.
இதனால் விராட் கோலி எதிர்வரும் போட்டிகளில் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது. பெங்களூரு அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஏப்ரல் 7-ம் தேதி மும்பை இந்தியன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.