
சிருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள் கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒருமுறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதம முனிவர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார்.
இதையடுத்து இருவரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அவர்களுக்கு சாப விமோசனம் கொடுத்த பகவான், "உங்கள் ஆன்மா வைகுண்டம் செல்லும் அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும்" என அருள்பாலித்தார். மேலும் "என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள்" என அருளினார்.
அதன்படி வரதராஜப் பெருமாள் கோவில் கருவறை பின்பகுதியின் மேற்கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட 2 பல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன. பகவானை வழிபடும் பக்தர்கள் இந்த பல்லி உருவங்களை தொட்டு வணங்கி செல்கின்றனர்.