புதுடெல்லி,ஏப்.16: பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கார்கே, ராகுல்காந்தியை நேற்று தேஜஸ்வியாதவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லி வந்தார்.
அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தேஜஸ்வியாதவ் கூறியதாவது: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் யார் என்பதை ஊடகங்கள் ஊகிக்க வேண்டாம். முதல்வர் முகத்தைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, நாங்கள் எங்களுக்குள் பேசி முடிவெடுப்போம். அனைத்தும் விரைவில் தெளிவுபடுத்தப்படும்.தொகுதி பங்கீடு குறித்த அடுத்த ஆலோசனை கூட்டம் நாளை பாட்னாவில் நடைபெறும். இவ்வாறு கூறினார்.
மாற்றம் நிச்சயம்
தேஜஸ்வி சந்திப்பு குறித்து கார்கே தனது எக்ஸ் பதிவில்,’ இந்த நேரத்தில் பீகாரில் மாற்றம் நிச்சயம். இந்தியா கூட்டணி பலம் குறித்து ஆலோசித்தோம். வரும் தேர்தலில், பீகார் மக்களுக்கு வலுவான, நேர்மறையான, நியாயமான ஆட்சியை வழங்குவோம். பாஜ மற்றும் அதன் சந்தர்ப்பவாத குண்டர் கூட்டணியில் இருந்து பீகார் விடுவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டார். ராகுல்காந்தி,’ இது ஒரு முக்கியமான சந்திப்பு’ என்று தெரிவித்து இருந்தார்.
The post பீகார் சட்டப்பேரவை தேர்தல்; கார்கே, ராகுல்காந்தியுடன் தேஜஸ்வி ஆலோசனை: நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.