பாட்னா: பீகாரில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவ.13ல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி வெற்றி பெற்றதால் அவரது இமாம்கஞ்ச் தொகுதி காலியானது. இதில் அவரது இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியின் சார்பில் மஞ்சியின் மருமகள் போட்டியிடுகின்றார். இதனையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜிதன் ராம் மஞ்சி, ஜன் சுரஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரை விமர்சித்து இருந்தார். ஜன் சுரஜ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு லட்சம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக மஞ்சி கூறியிருந்தார்.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர், ‘‘தான் என்ன சொல்கிறோம் என்பது மஞ்சிக்கு புரிகிறதா? ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சுமார் 2லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். ஒரு வாக்காளருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்தால் மொத்தம் எவ்வளவு தொகை என்பதை கணக்கிட்டு பாருங்கள். இவ்வளவு பெரிய பணக்குவியலில் நாங்கள் இருப்பதாக மஞ்சி நம்பினால் எங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும்” என்றார்.
The post பீகார் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.1 லட்சமா? ஒன்றிய அமைச்சர் புகாருக்கு பிரசாந்த் கிஷோர் விமர்சனம் appeared first on Dinakaran.