
புதுடெல்லி,
பீகார் மாநிலம் பாட்னாவில் தொழில் அதிபர் கோபால் கெம்கா, கடந்த 4-ந் தேதி தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பாட்னாவில் தொழில் அதிபர் கோபால் கெம்காவை வெளிப்படையாக சுட்டுக்கொன்ற சம்பவம் பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக மாற்றியது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கி சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் இங்கே புதிய வழக்கமாகி விட்டது.
அரசாங்கம் அங்கு முற்றிலும் தோல்வியடைந்து உள்ளது. பீகாரின் சகோதர சகோதரிகளே, இந்த அநீதியை இனி பொறுத்துக்கொள்ள கூடாது. உங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்துக்கும் பொறுப்பேற்க முடியாது.
ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும் மாற்றத்துக்கான கூக்குரல். இப்போது ஒரு புதிய பீகாருக்கான நேரம். தற்போது அங்கு முன்னேற்றம் இல்லை, பயம் இல்லை. இந்த முறை நீங்கள் செலுத்தும் வாக்கு. அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல, பீகாரை காப்பாற்றுவதற்கும் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.