ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு நிலப் பத்திரங்கள்: காஞ்சி கலெக்டர் வழங்கினார்

2 hours ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து 557 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சொந்த நிலம் வாங்க 18 முதல் 55 வயது வரை மற்றும் ரூ.3 லட்சத்திற்குள் குடும்ப ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், இதுவரை 17 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனைத்தும் களஆய்வு மேற்கொண்டு மானியம் வழங்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சரால் முதல் இரு பயனாளிகளுக்கு சொந்த நிலமாக்கப்பட்ட ஆவணங்களை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் மூலம் நிலமாக்கப்பட்ட பத்திரங்களை தமிழ்நாடு முதல்வரிடம் பெற்ற சசிகலா, கலைச்செல்வி மோகன் முன்னிலையில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் நன்றி தெரிவித்தார்.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி ஊராட்சியைச் சேர்ந்த சசிகலா கூறியிருப்பதாவது: நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் எங்களுக்கு விவசாயம் செய்வதற்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத காரணத்தால், தினக்கூலியாக விவசாய வேலைக்கு சென்று வந்தோம். தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் எங்களுக்கு 5 லட்சம் மானியம் கிடைத்தது.

நாங்கள் கூலி வேலை செய்த அதே இடத்தினை எங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள மகளிர் தினத்தன்று நிலமாக்கப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கையினால் பெற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, மேலும் அவரது திட்டங்கள் அனைத்தும் வரவேற்கதக்கதாகவும் உள்ளன, எனக் கூறி தனது நன்றியினை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, சப் கலெக்டர் (பயிற்சி) மிருணாளினி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) வே.ராஜசுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, கலந்துகொண்டனர்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு நிலப் பத்திரங்கள்: காஞ்சி கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article