சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர், வராதவர்கள், பிளஸ் 1 வகுப்பில் நிலுவைப் பாடங்கள் வைத்திருப்பவர்கள் என தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது துணைத் தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் 1 வகுப்பு தேர்வில் நிலுவை வைத்திருப்போர், தேர்வுக்கு வராத பள்ளி மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வசதியாக துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க மேற்கண்ட மாணவ மாணவியர் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை அவர்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 14ம் தேதி மதல் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டள்ள சேவை மையங்கள் மூலம் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், 14ம் தேதி முதல் 29ம் தேதிகளில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறும் மாணவ மாணவியர சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் உரிய கட்டணத்தொகையுடன் மே 30 மற்றும் 31ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும். இந்த கட்டணம் 2024-2025ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத, வருகைபுரியாத மாணவர்களு க்கு மட்டும் இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் சேவை மையங்களின் விவரங்கள், ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் தொடர்பான அறிவுரைகள் அனைத்தும் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்குரிய தேர்வு அட்டவணையை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
The post பிளஸ்2 துணைத்தேர்வுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.