சென்னை,
இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இப்படம் எப்படி உள்ளது என்பதை காண்போம்.
படத்தில் கவின் பிச்சைக்காரராக வாழ்ந்து வருகிறார். ஒரு அரண்மனையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் கவின் அரண்மனைக்குள்ளேயே மாட்டிக்கொள்கிறார். அங்குள்ளவர்கள் சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். அதற்கு நடுவில் கவின் என்ன செய்கிறார்?அவரை என்ன செய்ய வைக்கிறார்கள்? அரண்மனையில் இருந்து கவின் தப்பிப்பாரா? என்பதுதான் மீதி கதை.
படத்தின் பெயர் குறிப்பிடுவதுபோல ஒரு பிச்சைக்காரர்தான் இந்தக் கதையின் முக்கிய கதாப்பாத்திரம். வித்தியாசமான தோற்றத்துடன், அப்பாவித்தனம் கலந்த உடல் மொழியில் தடம் பதிக்கிறார் கவின். ரெடின் கிங்ஸ்லியின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
ஜென் மார்ட்டினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகமான நகர்வுக்கு வலுசேர்க்கிறது. மலையாள நடிகர் சுனில் சுகதா சைலண்ட் வில்லனாக மிரட்டுகிறார். அதேபோல் தெலுங்கு நடிகர் பிருத்வி ராஜ் காமெடியில் கலக்குகிறார். ஆனாலும் அர்ஷத்தின் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள்தான் காமெடியின் உச்சம்.
சில இடங்களில் நெல்சனின் பிளாக் காமெடி நன்றாகவே இருந்திருக்கிறது. படத்திற்கு இசை, ஒளித்தொகுப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. முதல் பாதையில் பெரிய அளவு சுவாரசியம் இல்லை என்றாலும் இரண்டாம் பாதி ஓகே. அறிமுக இயக்குனராக சிவபாலன் முத்துக்குமார் சிஸ்சர் அடிக்க முயற்சி செய்து பவுண்டரி அடித்துள்ளார்.