பிறக்கும்போதே குழந்தைகளுக்கு நீரிழிவு நோய்.. வாழ்நாள் முழுவதும் இன்சுலின் செலுத்த வேண்டுமா?

2 hours ago 1

ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திய நீரிழிவு நோய், இப்போது வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினருக்கும் வருகிறது. பிறக்கும்போதே நீரிழிவு நோயுடன் பிறக்கும் குழந்தைகளும் உள்ளனர்.

இவ்வாறு பிறக்கும்போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலை, நியோநேட்டல் டயாபட்டீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மரபணு காரணங்களால் ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் கிளைபன்கிளைமைட் போன்ற மருந்துகளால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இது சில குழந்தைகளுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தினாலும் ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாகும் முன் தானாகவே குணமாகி விடுகிறது.

டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இன்சுலின் ஊசி செலுத்தி கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது, இருப்பினும் கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

1. இன்சுலின் பம்ப் உட்செலுத்திக்கொள்வது:

இதன் மூலம் தினமும் மூன்று அல்லது நான்கு முறை இன்சுலின் போட வேண்டிய நிலையை மாற்றலாம்.

2 . கணைய மாற்று அறுவை சிகிச்சை:

டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. எனினும் இதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் பெரும்பாலானவர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடிவதில்லை.

3. ஐலட்ஸ் செல் மாற்று அறுவை சிகிச்சை:

இந்த முறை சிகிச்சையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. இது கனணய ஐலட்ஸ் செல்களை உறுப்பு கொடையாளிகளிருந்து பெற்று கல்லீரலில் உள்ள போர்டல் தமனியில் செலுத்தப்படுகிறது.

4. ஸ்டெம் செல் சிகிச்சை (குருத்தணு சிகிச்சை):

டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் மனித ஸ்டெம் செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களாக மாற்றப்பட்டு, இன்சுலின் அதிகமாக சுரந்து, அதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

5. செயற்கை கணையம் ( ஆர்டிபிசியல் பேன்க்கிரியாஸ்): இதில் இன்சுலின் பம்ப் மற்றும் குளுக்கோஸ் மானிட்டரைக் கொண்ட ஒரு மூடிய லூப் அமைப்பு, ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயலியுடன் இணைந்து செயலாற்றுகிறது.

6. பயோனிக் பேன்க்ரியாஸ்: இதில் பொருத்தப்படும் செயற்கை கணைய இயந்திரம், ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணித்து ஏற்ற தாழ்வுகளை சரிசெய்கிறது.

 

Read Entire Article