ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு

3 hours ago 1

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேருக்கு நேர் மோதுகிறது. தி.மு.க. தரப்பில் விசி சந்திரகுமாரும், நா.த.க. தரப்பில் சீதாலட்சுமியும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இரு தரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஒரு மாதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பெரியார் ஆதரவு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியாரை சீமான் கடுமையாக விமர்சித்தார். இதற்கு சீமான் மீது கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஏற்கனவே அவரை கண்டித்து பல்வேறு இயக்கங்களும் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டன.

இந்த நிலையில் ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெரியாரை கடுமையாக விமர்சித்து வரும் சீமானை கண்டித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் துண்டறிக்கையை விநியோகித்தனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் யார் துண்டறிக்கை கொடுப்பது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் குறித்து துண்டறிக்கை வழங்கிய தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 5 பிரிவுகளின் கீழ் ஈரோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Read Entire Article