
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் 62 ரன், பெத்தேல் 55 ரன், ஷெப்பர்ட் 53 ரன் எடுத்தனர்.
சென்னை தரப்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மாத்ரே 94 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் என்கிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரொமாரியோ ஷெப்பர்ட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் அதிரடி வீரர் டெவால்ட் பிரேவிஸ்-க்கு நடுவர் அவுட் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. இன்னிங்ஸின் 17-வது ஓவரை லுங்கி என்கிடி வீசிய நிலையில் ஓவரின் 4-வது பந்தை டெவால்ட் பிரேவிஸ் எதிர்கொண்டார். அப்போது என்கிடி லெக் திசையை நோக்கி வீசிய புல்டாஸ் பந்தை எதிர்கொண்ட பிரேவிஸ் பந்தை முழுமையாக தவறவிட, அது அவரது பேடில் பட்டது.
இதனையடுத்து பந்துவீச்சாளர் இதற்கு அவுட் என அப்பில் செய்ய கள நடுவர் நிதின் மேனனும் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதனை கவனிக்காத டெவால்ட் பிரேவிஸ் ரன்களை எடுப்பதற்காக ஓடினார். ஆனால், பின்னர் நடுவரின் முடிவை அறிந்த அவர் மேல் முறையீடு செய்வதற்காக மூன்றாம் நடுவரை அனுக முயற்சித்தார். ஆனால் பிரேவிஸ் மேல் முறையீடு செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கள நடுவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
ஆனால், இந்த முடிவின் போது டி.ஆர்.எஸ் டைமர் திரையில் காட்டப்படவில்லை. இதனால் தனக்கு எவ்வளவு குறைந்த நேரம் இருக்கிறது என்பது பிரேவிஸுக்குத் தெரியாது. இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவும் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால், நடுவர்கள் தங்கள் முடிவில் இருந்து மாறாமல் பிரேவேஸுக்கு மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.
இதனால் இப்போட்டியில் பிரேவிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதன்பின் காண்பிக்கப்பட்ட ரீப்ளேவில் அந்த பந்து ஸ்டம்புகளை முழுமையாக தவறவிட்டது தெரியவந்தது. இதன் காரணமாகவே நடுவரின் தீர்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டி.ஆர்.எஸ் விதி முறையின்படி, நடுவரின் முடிவை சவால் செய்ய விரும்பும் எந்தவொரு அணியும் நடுவர் அவுட் கொடுத்த 15 வினாடிகளுக்குள் ரிவ்யூ மேற்கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த அணியால் ரிவ்யூ எடுக்க முடியாது.
மேலும், நடுவர் அவுட் கொடுத்தால் பந்து அதோடு டெட் பால் ஆகிவிடும். அதனால் பிரேவிஸின் நீக்கம் தொழில்நுட்ப குழப்பத்தின் விளைவாக இருக்கலாம், ஆனால் அது கிரிக்கெட் விதிகளின் கீழ் செல்லுபடியாகும்.