இலங்கை கடற் கொள்ளையர் அட்டூழியம்.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்

5 hours ago 3

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் மீன்பிடி படகில் ஆனந்த், முரளி, சாமிநாதன், வெற்றிவேல் அன்பரசன் ஆகியோர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் கடந்த இரண்டாம் தேதி கோடியக்கரைக்கு தென் கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்களிடம் இருந்து மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதே போல் செருதூர் மற்றும் ஆறுகாட்டுத்துறை கிராமங்களில் இருந்து மீன் பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்த பொருள்களையும் மீன்களையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ஐந்து இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து ரூ 10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களும், மீன்களும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் இறங்கி மீன்பிடிக்க முடியாத நெருக்கடியை இலங்கை கடற்படையும், கடற் கொள்ளையர்களும் ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் பல்லாயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கடற் கொள்ளையர்களின் அட்டூழியத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசும், முதல்-அமைச்சரும், அரசியல் கட்சிகளும், மீனவர் சங்கங்களும், ஒன்றிய அரசின் தலையீட்டுக்கும் தீர்வுக்கும் தொடர்ந்து முறையிட்டு வரும் போதும், அவைகள் அனைத்தும் செவிட்டு செவியில் ஊதிய சங்காக முடிந்து விடுகிறது. இதனால் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பாஜக மத்திய அரசும், பிரதமரும் அரசியல் உறுதியுடன் நடவடிக்கை மேற்கொண்டு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article