
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான சாலைகளில் உள்ள 'பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் சைவ பிரியாணி எனப்படும் பிரிஞ்சி சாதம் பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.