வாஷிங்டன்: இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யாவின் கூட்டு அமைப்பான பிரிக்ஸ் கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகள், அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுயுள்ளார். பிரிக்ஸ் உறுப்பினர்கள் அமெரிக்க கட்டணக் கொள்கைகளை விமர்சித்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) சீர்திருத்தங்களை முன்மொழிந்ததையும், முக்கிய நாணயங்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதையும் விமர்சித்ததைத் தொடர்ந்து டிரம்ப் தனது ட்ரூத் சமுக வலைதள பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, பிரிக்ஸ் உறுப்பினர்களின் பட்டியல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவைத் தாண்டி எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
நேற்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒரு கூட்டத்தைத் தொடங்கிய பிரிக்ஸ் தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை; கட்டணங்கள் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும், “சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நிச்சயமற்ற தன்மையை” ஏற்படுத்துவதாகவும் விமர்சித்தது.
ஜூன் மாதம் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களையும் தலைவர்கள் கண்டனம் செய்தனர். இந்த தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் விமர்சித்தனர். ஜூன் 13 முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானில் உள்ள அதன் அணுசக்தி நிலையங்கள் உட்பட தாக்கியுள்ளன.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல் முறையாக இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பிரதமர் லி கியாங் பங்கேற்றார். உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்டைப் பெற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆன்லைனில் கலந்து கொண்டார்.
2024 ஆம் ஆண்டில், பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்குப் போட்டியாக தங்கள் சொந்த நாணயத்துடன் முன்னேறினால், 100% வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.
The post பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10 % கூடுதல் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.