பெங்களூரு: கர்நாடகா மக்களிடம் ஆசை வார்த்தை கூறி சீட்டு கம்பெனி நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த கேரளா தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராம்மூர்த்தி நகரில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்த மலையாள தம்பதியினரான ஏ.வர்கீஸ் மற்றும் அவரது மனைவி ஷைனி ஆகியோர், ‘ஏ அண்ட் ஏ சிட் ஃபண்ட்ஸ்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலான சிறிய அளவிலான சீட்டுகளை நடத்தி, அப்பகுதி மக்களிடையே நல்ல நம்பிக்கையைப் பெற்றனர். நாளடைவில், தங்களது சீட்டு வியாபாரத்தை விரிவுபடுத்தி, நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இவர்களது நீண்ட கால பழக்கம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், ஏராளமானோர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் முதலீடு செய்துள்ளனர்.
ஒன்றரை கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்கள் கூட இந்த மோசடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் கேரளாவில் உள்ள ஆலப்புழாவிற்குச் செல்வதாகவும் முதலீட்டாளர்களிடம் கூறிவிட்டு, ஏ.வர்கீஸ் தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். அதன் பிறகு அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதற்கட்டமாக, 70 லட்சம் ரூபாயை இழந்த சாவியோ என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இதுவரை 265 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன்படி, சுமார் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட புகார்களின் அடிப்படையில், வர்கீஸ் மற்றும் அவரது மனைவி ஷைனி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
The post கர்நாடகாவில் அதிக வட்டி தருவதாக சீட்டு கம்பெனி நடத்தி ரூ.40 கோடி மோசடி: கேரளா தம்பதி குடும்பத்துடன் தலைமறைவு appeared first on Dinakaran.