பிரான்ஸ் பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

1 week ago 5

வாஷிங்டன்: பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. இதற்கிடையே, பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டார். விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார். இதையடுத்து, இந்திய நேரப்படி இன்று அதிகாலை வாஷிங்டன் டிசி நகருக்கு பிரதமர் ேமாடி சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

மேலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்க திரண்டிருந்தனர். பலர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். குறிப்பாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்தித்து பேசுகிறார். அமெரிக்க அதிபராக டிரம்பின் 2வது பதவிக்காலத்தில் அவரை பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இரு தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய நட்பு நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தனது அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவி காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பெற்ற வெற்றிகளை தொடர இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும். அத்துடன் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாண்மையை மேலும் உயர்த்தவும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கவும் இது
உதவும். இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு விரிவான கூட்டுறவை உருவாக்க அவரது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை, தான் மிகவும் அன்புடன் நினைவில் கொண்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 

The post பிரான்ஸ் பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article