பிரஷர் அதிகம் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப்பணி: சென்னையை அழகுபடுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்

1 day ago 2

சிறப்பு செய்தி
பிரஷர் அதிகம் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்து பேருந்து நிழற்குடைகளை சுத்தம் செய்யும் பணியை சென்னை மாநகராட்சி முதல் முறையாக தொடங்கியுள்ளது. சென்னையை அழகுபடுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பதவி ஏற்ற பிறகு அடிப்படை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதியில் கேட்பாரற்று கிடந்த வாகனங்களை அகற்றுவது, கழிவுகளை அகற்றுவதுபோன்ற பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒரு கட்டமாக ஏற்கனவே சென்னை மாநகராட்சி தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா ஆகியோர் தினமும் ஆய்வு செய்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் டிப்பர் லாரிகள், மினி லாரிகள், பொக்லைன் வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 159 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டடக் கழிவுகள் அகற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த குப்பையை அகற்றும் போது கீழே விழும் குப்பையாலும், அந்த குப்பை தொட்டிகளாலும் அந்த இடம் அசுத்தம் நிறைந்ததாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். இதனை தவிர்க்க உயர் அழுத்த பம்புகள் கொண்ட வாகனங்கள் மூலம் தற்போது குப்பை தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை ஓரளவு குப்பை தொட்டிகளை சுத்தமாக பராமரிக்க உதவுவதாக பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகளும், பல்வேறு துறை சார்ந்த பணிகளும் நடைபெறுகிறது. இதற்காக பல இடங்களில் பள்ளம் தோண்டப்படுவதால், அந்த பகுதிகளில் உள்ள பேருந்து நிழற்குடைகள் தூசி படிந்து, அசுத்தமாக காணப்படுகிறது. பல இடங்களில் புதிதாக பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு தூசி படிந்து காணப்படுவதுடன், மழை காலங்களில் ஏற்பட்ட சகதி தெறித்து, பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால், பயணிகள் நிழற்குடையில் அமர்வதற்கு தயக்கம் காட்டி வந்தனர். எனவே, இதை தூய்மைப்படுத்தி அழகாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

அதன்பேரில், சென்னை நகரத்தில் உள்ள 925 பேருந்து நிழற்குடைகளை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதோடு அழகுபடுத்தப்பட்ட நடைபாதைகளையும் சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மண்டலத்திற்கு 2 வாகனங்கள் என்ற அடிப்படையில் உயர்அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்ட 30 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில் பிரஷர் அதிகம் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால், தண்ணீரை பீய்ச்சி அடித்து பேருந்து நிழற்குடைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் சுழற்சி முறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்தத் தூய்மைப் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் தண்ணீர் பெறப்பட உள்ளது. அதாவது, கழிவுநீரினை மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீரை இதற்காக பயன்படுத்த உள்ளனர். இந்த சுத்தம் செய்யும் திட்டத்தின் மூலம் சென்னை மேலும் அழகுபடுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பிரஷர் அதிகம் கொண்ட மோட்டார் மூலம் தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் திட்டம் சென்னையை அழகுபடுத்தும் பணியில் முக்கியத்துவம் பெறும் என்றே நினைக்கிறோம். முதல்கட்டமாக 925 பேருந்து நிழற்குடைகளும், 173 நடைபாதைகளையும் சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு மண்டலத்துக்கு 2 என 30 வாகனங்களை இந்த பணியில் பயன்படுத்தப்படும். இந்த வாகனங்களை கையாளவும், கண்காணிக்கவும் தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்னர். அவர்கள் கண்காணிப்பில் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே தீவிர தூய்மை பணிகளால் பல இடங்கள் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. குப்பைகள் நிறைந்த இடங்கள் எல்லாம் தூய்மையாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணி சென்னையை அழகுபடுத்துவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கிறோம். இப்பணி சென்னையில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பிரஷர் அதிகம் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப்பணி: சென்னையை அழகுபடுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article