
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர்களான சீதா, லட்சுமணர், ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் ஐந்தாம் நாளான இன்று காலையில் மோகினி அலங்காரத்தில் கோதண்டராமர் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். வண்ணமயமான வஸ்திரங்கள் அணிந்து, மலர்கள் சூடி, ஜொலிக்கும் நகைகள் அணிந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் உள்ளே மோகினி வடிவில் கம்பீரமாக அமர்ந்திருந்த கோதண்ட ராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாகன வீதிஉலா முன்னால் ஆண், பெண் கலைஞர்கள் கோலாட்டம், குழு ஆட்டம், பரத நாட்டியம் ஆடினர். செண்டை மேளம் மற்றும் இறை இசை மங்கள வாத்தியங்கள் முழங்கின. மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான துணை அதிகாரி நாகரத்னா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.