திருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தக திருவிழா இன்று தொடங்குகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாக்களை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடந்து வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தகத் திருவிழா இன்று (14ம் தேதி) தொடங்கி, வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசான்ய மைதானத்தில் புத்தக திருவிழா நடக்கிறது. அதையொட்டி, பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில், முன்னணி பதிப்பகங்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அதையொட்டி, 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையிலான புத்தகங்கள், இலக்கியம், நாவல், அரசியல், மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என எண்ணற்ற நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், புத்தக திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் மாலை நேரங்களில், முன்னணி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், படைப்பாளர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, புத்தக கண்காட்சி அரங்கத்துக்கு அருகே தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி அரங்குகள் திறந்திருக்கும்.
இந்நிலையில், திருவண்ணாமலை புத்தக திருவிழாவை இன்று மாலை 4 மணியளவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிடுகிறார். விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேசுகிறார்.
வரும் 16ம் தேதி எழுந்தாளர் பவா.செல்லதுரை, வரும 17ம் தேதி கவிஞர் மனுஷ்யபுத்திரன், வரும் 18ம் தேதி எழுத்தாளர் அழகியபெரியவன், வரும் 19ம் தேதி கவிஞர் நெல்லை ஜெயந்தா, வரும் 20ம் தேதி பேச்சாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், 21ம் தேதி எழுத்தாளர் எஸ்கேபி கருணாநிதி, 22ம் தேதி, திரைப்பட இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார், ஆகியோர் பேசுகின்றன். மேலும், வரும் 23ம் தேதி 1000 பேருக்கு புத்தங்களை வழங்கி வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இங்கிருந்தும் தொடங்கலாம் எனும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசுகிறார். நிறைவாக 24ம் தேதி எழுத்தாளர் முத்துவேல் ராமமூர்த்தி பேசுகிறார்.
The post பிரமாண்ட புத்தகத் திருவிழா * அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார் * 100 அரங்குகள்: லட்சக்கணக்கான புத்தகங்கள் திருவண்ணாமலையில் இன்று முதல் appeared first on Dinakaran.