
சென்னை,
நடிகர் பிரபாஸ் சலார், கல்கி 2898 ஏடி படங்களின் வெற்றியைத்தொடர்ந்து, பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் .'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதன்படி, இப்படத்தில் கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக், பிரபல பாலிவுட் ஜோடியான சைப் அலிகான் - கரீனா கபூர் ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படம் குறித்த மற்றொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் மலையாள மெகாஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும், இப்படம் 8 மொழிகளில் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.