உதகை மலர் கண்காட்சியை இன்று ஒரே நாளில் 13,000 பேர் கண்டு ரசித்துள்ளதாக தகவல்

5 hours ago 3

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, உதகையில் ரோஜா கண்காட்சி நடந்து முடிந்தது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக மலர் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 127-வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் அலங்காரங்களை பார்வையிட்டார்

இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்பட 275 வகையான விதைகள், நாற்றுகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 7½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இதேபோல் மலர் மாடம் உள்ளிட்ட இடங்களில் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.கண்காட்சியில் முக்கிய அம்சமாக பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில், 2 லட்சம் கார்னேசன் உள்பட பல்வேறு மலர்களால் ராஜராஜ சோழனின் அரண்மனை போல அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் சோழ அரசின் பெருமையை விளக்கும் வகையில், கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை வடிவம், 65 ஆயிரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7 லட்சம் மலர்களால் செஸ், யானை உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. நுழைவுவாயில் 1.70 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் , உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கிய 127வது மலர் கண்காட்சியை 13,000 பேர் கண்டு ரசித்துள்ளனர் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது .

இன்று முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . 

Read Entire Article