'பிரதர்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

2 months ago 13

சென்னை,

ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கும் 'பிரதர்' படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இப்படம் எப்படி உள்ளது என்பதை காண்போம்.

சட்ட படிப்பு படிக்கும் மாணவராக வரும் கார்த்தி என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி சென்னையில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். வழக்கறிஞர் படிப்பை முடிக்காவிட்டாலும் எதற்கெடுத்தாலும் 'லா பாயின்ட்' பேசுகிறார் ஜெயம் ரவி. இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட அவரைத் திருத்துவதற்காக, ஊட்டியில் இருக்கும் அக்கா பூமிகா அங்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கும் ஜெயம் ரவியால் பூமிகாவின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் பூமிகா கணவனின் வீட்டை விட்டு தம்பியுடன் வெளியேறுகிறார். இதையடுத்து பிரிந்த குடும்பத்தை எப்படி ஜெயம் ரவி ஒன்று சேர்க்கிறார்? என்பது மீதி கதை.

கார்த்தி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஆவேச காட்சிகளில் அசத்துவதுபோல் நகைச்சுவையிலும், எமோஷன் காட்சியிலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார். பிரியங்கா மோகன் அழகில் வசீகரிக்கிறார். அக்கா கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருந்தாலும், பூமிகாவுக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். விடிவி கணேஷின் நகைச்சுவை சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ராவ் ரமேஷ், நட்டி, சரண்யா பொன்வண்ணன், அச்யுத்குமார், சீதா, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

பூமிகாவின் கணவராக வரும் நட்டி நட்ராஜ் அனுபவ நடிப்பின் மூலம் திறமையான நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'மக்காமிஷி' ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கதையை இலகுவாக நகர்த்த உதவுகிறது. ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் ஊட்டி அழகை பிரமாதமாக காட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

பாடல் காட்சிகளை உயர்தரத்தில் படமாக்கிய விதம் அருமை.காமெடி, காதல், சென்டிமென்ட், அக்கா-தம்பி பாசத்துடன் கவலைகளை மறந்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜேஷ்.

Read Entire Article