
புதுடெல்லி,
நாட்டில் முதிய வயதினரிடையே காணப்பட்ட டைப் 2 டயாபடீஸ் வியாதியானது, குழந்தைகளிடையேயும் அதிகரித்து காணப்படுகிறது என சி.பி.எஸ்.இ. அமைப்பின் கவனத்திற்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பள்ளி முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், அதிக அளவில் சர்க்கரையை அவர்கள் உட்கொள்கின்றனர். பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் சர்க்கரை கலந்த நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதில் கிடைக்கின்றன. சர்க்கரையை கூடுதலாக உட்கொள்ளும்போது, அது டயாபடீஸ் பாதிப்பை அதிகரிக்க செய்வது மட்டுமின்றி, உடல் பருமன், பல் பாதிப்புகள் மற்றும் பிற உடலியக்க குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன.
இதன் விளைவாக, குழந்தைகளின் நீண்டகால சுகாதார மற்றும் கல்வி செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டு உள்ளது.
இதுபற்றிய ஆய்வில், தினசரி எடுத்து கொள்ளும் கலோரிக்கு, 4 முதல் 10 வயதுடைய குழந்தைகளில் 13 சதவீதம் பேருக்கும் மற்றும் 11 முதல் 18 வயதுடையவர்களில் 15 சதவீதம் பேருக்கும் சர்க்கரை குறிப்பிட்ட அளவில் பங்கு வகிக்கின்றது. இது பரிந்துரைக்கப்பட்ட 5 சதவீதம் என்ற அளவை விட மிக அதிகம் ஆகும் என அந்த ஆய்வு சுட்டி காட்டுகின்றது.
இதனால் பள்ளிகளில் மாணவர்களை கண்காணிப்பதற்காக, சர்க்கரை பலகைகளை உருவாக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அந்த பலகைகளில், அத்தியாவசிய விசயங்கள் எழுதப்பட வேண்டும்.
தினசரி உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவு, பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளில் உள்ள சர்க்கரை அளவு (சத்துகள் இல்லாத உணவுகள், குளிர்பானம் போன்ற சுகாதாரமற்ற உணவுகள்), அதிக சர்க்கரை உட்கொள்ளலால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் மற்றும் ஆரோக்கியத்திற்கான மாற்று உணவுகள் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெறும்.
இது, மாணவர்களுக்கு உணவு தேர்வு செய்வதில் கல்வியறிவை ஊட்டும். மாணவர்களிடையே நீண்டகால சுகாதார பலன்களையும் ஊக்குவிக்கும் என அந்த கடிதம் தெரிவிக்கின்றது.
இந்த விசயத்தில், விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளையும் நடத்த வேண்டும் என பள்ளிகளிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இதுபற்றிய விரிவான அறிக்கை மற்றும் சில புகைப்படங்களை ஜூலை 15-ந்தேதிக்குள் பள்ளிகள் பதிவேற்றம் செய்யலாம் என்றும் வாரியம் தெரிவித்து உள்ளது.