
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி இன்று தொடங்குகிறது. அதன்படி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ள விராட் கோலி சரியான வழியனுப்புதல் இல்லாமல் ஓய்வு பெற்றது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விராட் கோலியை கவுரவிக்கும் விதமாக, இன்றைய ஐ.பி.எல். போட்டிக்கு கோலியின் '18'-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்து ஆர்சிபி ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் மைதானம் முழுவதும் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறது. ரசிகர்களின் இந்த செயல் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.