வேலூர்,
வேலூரில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டுவிட்டது. இது பாடியவர்களின் தவறு. அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும். இதற்காக கவர்னரை தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தரம் தாழ்த்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. பாரத தேசம் முன்பு 56 தேசங்களாக இருந்தது. அப்போது 2 பெரிய நிலப்பரப்புகளில் பஞ்சதிராவிடம் ஒன்று. அதில் முதல் மாநிலமே குஜராத்தான். அதனால் பிரதமர் மோடியே திராவிடர்தான். இவ்வாறு அவர் கூறினார்.