
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7-ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. சனிக்கிழமை மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலும் அமைதியாக இருந்தது.
இதற்கிடையே சண்டை நிறுத்தத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டபடி, இன்று இருநாட்டு ராணுவ டிஜிஎம்ஓக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.சற்று நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் முப்படைகளின் தளபதி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.