12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்... தேனியில் நெகிழ்ச்சி

4 hours ago 2

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். அவருடைய மனைவி ருக்குமணி. இந்த தம்பதிக்கு குமார், செந்தில், முருகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் சொந்த ஊரில் இருந்து பிழைப்பு தேடி, கடந்த 1985-ம் ஆண்டு குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்தனர்.

அப்போது, மூத்த மகனான குமாரை வேலைக்கு செல்லும்படி அவரது பெற்றோர் வலியுறுத்தினர். இதனால் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு குமார் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து குமாரை, பல இடங்களில் அவரது பெற்றோர் தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே நடராஜன் இறந்து விட்டார். இதனால் ருக்குமணி தனது 2-வது மகன் செந்திலுடன் சொந்த ஊரான கதிர்நரசிங்கபுரத்தில் வந்து குடியேறினார். இளைய மகன் முருகன் சென்னையிலேயே வேலை செய்து வருகிறார். இதற்கிடையே 12 வயதில் காணாமல் போன குமார், மீண்டும் ஊருக்கு திரும்பி செல்ல கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார்.

இவர் பல்வேறு ஊர்களில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்தார். மேலும் மும்பை, ஆந்திரா, காஷ்மீரில் மட்டுமின்றி மலேசியாவுக்கும் சென்று வேலை செய்தார். அதன்பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்த குமார், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.

அங்கு பல ஆண்டுகளாக விசுவாசமாக வேலை செய்து வந்த குமாரை, ஓட்டல் உரிமையாளர் ஆறுமுகத்துக்கு மிகவும் பிடித்தது. இதனால் தனது பேத்தியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணமாகி மனைவியுடன் மச்சுவாடி கிராமத்தில் வசித்து வந்த குமாருக்கு 3 மகள்கள் உள்ளனர். பின்னர் அந்த ஓட்டலை குமார் நடத்தி வந்தார். ஆண்டுகள் பல உருண்டோடி விட்ட நிலையில் மூத்த மகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேனி மாவட்டத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு குமார் தனது குடும்பத்தினருடன் செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேலப்பர் கோவிலுக்கு பஸ்சில் சென்றபோது கதிர்நரசிங்கபுரம் ஊரை பார்த்தார். அப்போது அவருக்கு கடந்த கால நிகழ்வுகள் தன் கண் முன்னே வந்து சென்றது. தனது பெற்றோர் மீது இருந்த கோபம் தணிந்து குமாரின் உள்ளம் கனிந்தது.

தனது குடும்பத்துடன் அவர் கதிர்நரசிங்கபுரத்தில் இறங்கினார். பின்னர் தனது குடும்ப விவரங்களை கிராம மக்களிடம் கூறினார். உடனடியாக கிராம மக்கள், அவருடைய குடும்பத்தினர் மற்றும் தாயார் ருக்குமணி வசிக்கும் வீடு குறித்தும் தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து குமார் தனது தாய் வசிக்கும் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் வயதான நிலையில் இருந்த தனது தாய் ருக்குமணியை பார்த்தார். அப்போது, 40 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடிச்சென்ற உனது மூத்த மகன் குமார் வந்துள்ளேன் என்று தன்னை தாயாரிடம் தெரிவித்தார். தனது மனைவி, மகள்களையும் அறிமுகம் செய்து வைத்தார். ஒருகணம் ஆச்சரியத்தில் உறைந்த ருக்குமணி, மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்தியபடி மகனை கட்டி தழுவினார்.

மேலும் 90 வயதை கடந்த குமாரின் பாட்டியும், குமார் திரும்பி வந்ததை அறிந்து மகிழ்ச்சியில் பேரனை கட்டியணைத்தார். மேலும் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்த குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வு அப்பகுதி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article