
சென்னை,
சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
"தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!"
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.