
புதுடெல்லி,
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த, சி.பி.ஐ. அமைப்பின் அடுத்த தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் பங்கேற்றார். பாகிஸ்தான் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், விசா ரத்து, துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்கள் வர தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனால், பாகிஸ்தான் கோபம் அடைந்துள்ளது. எல்லையில் அத்துமீறிபாகிஸ்தான் துப்பாக்கி சூடும் நடத்தி வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் போர் ஒத்திகை நடத்தவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழலில் ராகுல் காந்தி - மோடி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.