
ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா இருவரும் தலா 41 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்தது. இந்த நிலையில், இன்னிங்ஸ் இடைவேளையின்போது பெய்த கனமழை காரணமாக ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் மழை நின்ற பிறகும் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாத அளவுக்கு மைதானத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த முடிவால் ஐதரபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
ஐதராபாத் அணி தற்போது 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.